மேல் மாகாண பிரதான செயலாளராக திருமதி ஜே.எம்.சி.ஜயந்தி விஜேதுங்க அவர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேல் மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி ஜே.எம்.சி.ஜயந்தி விஜேதுங்க அவர்கள் 2020.02.05 ஆம் தேதி பத்தரமுல்ல, மாகாண சபைக்கட்டிடத்தில் அமைந்துள்ள பிரதான செயலாளர் அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொழும்பு பல்கலைக்கழக கலைமாணி (இரண்டாம் தர – உயர்) பட்டதாரியான அவர் முகாமைத்துவம் தொடர்பான பட்டப்பின் கற்கை நிறுவனத்தில் பொது நிர்வாகம் தொடர்பான பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். மேலும் பொது நிர்வாகம் தொடர்பான முதுமானிப்பட்டத்துடன் விக்டோரியா மென்செஸ்டர் பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவம் தொடர்பான பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அலுவலரான திருமதி ஜே.எம்.சி.ஜயந்தி விஜேதுங்க அவர்கள் 2013.04.01 ஆம் திகதி முதல் 2016.09.20 ஆம் தேதி வரை மேல் மாகாண பிரதான செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

மீண்டும் மேல் மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் சுற்றாடல் மற்றும் வனவிலங்கு வள அமைச்சின் செயலாளராகவும், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராகவும், உயர் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மேலும், தொழிலாளர் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும், காணித்தீர்வுத் திணைக்கள (உரிமைகளைப்பதிவு செய்தல்) உதவி ஆணையாளராகவும், ஓய்வூதியத் திணைக்கள உதவிப்பணிப்பாளராகவும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பிரதிப்பணிப்பாளராகவும், திட்ட அமுலாக்கல் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் அமைச்சின் பதில் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும், நீர்கொழும்பு பிரதேச செயலாளராகவும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளராகவும் (தாபனம்), மேல் மாகாண பிரதான செயலாளர் அலுவலகத்தில் பிரதிப் பிரதான செயலாளர் (நிர்வாகம்), மேல் மாகாண கல்வி மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ள திருமதி ஜே.எம்.சி.ஜயந்தி விஜேதுங்க அவர்கள் இலங்கை நிர்வாக சேவையின் அனுபவமுள்ள திறமையான அலுவலராவார்.

அவர் கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய வைபவத்தில் மேல் மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதான செயலாளர்கள், திணைக்களப்பிரதானிகள் உள்ளிட்ட அரச அலுவலர்கள் கலந்து கொண்டனர்.